Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தற்கொலை, பாலியல் அச்சுறுத்தல்: நடிகை நிலீனா கண்ணீர் வீடியோ

சென்னை: ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை நிலீனா எலிசபெத் ஜோசப். அவரை நெட்டிசன்கள் பலரும் தூக்கிட்டு சாகும்படி கமென்ட்களில் கூறி வரும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வீடியோ வெளியிட்டு பேசியுள்ள நிலீனா, ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சிரமங்களை எதிர்கொண்டதாலேயே வீடியோ வெளியிடுவது தாமதமானது. இப்போது பேசுவது அவசியம் என்று தோன்றியதால்தான் இந்த வீடியோவைப் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

‘‘நான் வெளியே வந்தால் துப்புவோம் என்றும், நீ தற்கொலை செய்துகொள்ளக் கூடாதா என்றும் கேட்கும் செய்திகள் தினமும் 100 வந்துகொண்டு இருக்கிறது. உங்களை நான் புண்படுத்தும் வகையில் ஏதேனும் செய்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது நிலைப்பாடுகளோ அல்லது செயல்களோ யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதன் பெயரில் தனிப்பட்ட முறையில் அவதூறுகளை எதிர்கொள்வது வேதனையளிக்கிறது.

வலைதளங்களில் எனக்கு கருத்துகளை எழுதும்போது, மறுபக்கத்தில் இருப்பவர் உணர்ச்சிகள் உள்ள ஒரு மனிதர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வெளியே இருந்து பார்வையாளர்களாக இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதும், நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக வாழ்வதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். நேரத்தைத் தெரிந்துகொள்ள முடியாமல் போனதும், சரியான நேரத்தில் சாப்பிடவோ தூங்கவோ முடியாமல் போனதும் மனரீதியாகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தியது.

போட்டியின் போது ஒருவரின் நிலைப்பாட்டோடு கருத்து வேறுபாடு கொள்ளத்தான் செய்யலாம். ஆனால் அதற்காக தற்கொலை செய்துகொள்ளச் சொல்வதும், பாலியல் அச்சுறுத்தல்களை விடுப்பதும் விமர்சனத்தின் எல்லையைத் தாண்டிய நடவடிக்கை. கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தும்போது கூட, மறுபக்கத்தில் இருக்கும் நபரின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என்ற நிலீனா கண் கலங்கியபடி வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.