Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடல் வெளியானது

சென்னை: ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கேரளா, கோவை, கோவா எனப் பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்தது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி வெளியான வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பை அதிகரித்தது. குறிப்பாக பின்னணியில் இடம் பெற்ற இசை பலரது பாராட்டை குவித்தது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அதற்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்பாடல் ‘அலா போலேலோ(Ala Bolelo)’ எனும் தலைப்பில் அனிருத் குரலில் உருவாகியுள்ளது. மேலும் நடிகை பூர்ணா சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார். இவர் ‘கந்தகோட்டை’, ‘துரோகி’, ‘கொடி வீரன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்பாடல் நேற்று மாலை வெளியானதும் இணையத்தில் வைரலானது.

பாடலின் இசை, மெட்டு, பாட்டு வரிகள், அதில் ரஜினியின் ஸ்டைல், பூர்ணாவின் டான்ஸ் என ஒட்டுமொத்தமாக இப்பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. டிரெண்டிங்கில் தொடர்ந்து நம்பர் 1ல் உள்ளது. ‘அலா போலேலோ’ பாடல் முதல் பாகத்தில் வரவேற்பை பெற்ற ‘காவாலா’ பாடல் போல் அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அப்பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் மற்றும் நடன அமைப்பாளர் ஜானி இப்பாடலிலும் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.