மும்பை: கதாநாயகனின் மனைவிக்கு தன்னை பிடிக்காததால் சினிமா வாய்ப்பு பறிபோனதாக நடிகை டாப்சி பகிரங்கமாக தெரிவித்து உள்ளார்.தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை டாப்சி (36), தனது வெளிப்படையான கருத்துக்களுக்கு பெயர் பெற்றவர் ஆவார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘காந்தாரி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், சினிமா துறையில் கதாநாயகர்களின் தலையீட்டால் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை தற்போது அவர் போட்டு உடைத்துள்ளார்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ‘ஒரு படத்தில் ஒப்பந்தமான என்னை அதிலிருந்து நீக்கியதற்கு அந்த கதாநாயகனே காரணம் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நெருக்கமான ஒருவரை நடிக்க வைக்கவே அவ்வாறு செய்திருக்கலாம். எல்லாவற்றையும் விட, கதாநாயகனின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை என்பதுதான் எனக்கு சொல்லப்பட்ட மிக மோசமான காரணமாகும். மேலும், ஒரே மாதிரியான கதைகளில் தொடர்ந்து நடிப்பதை தவிர்க்கவே படங்களை நிராகரித்து வருகிறேன்’ என்றார். திரைத்துறையில் நிலவும் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான நடைமுறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
