Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நெட்பிளிக்சில் கதை திருட்டா?.. சிக்கலில் டாப்ஸி படம்

மும்பை: தேவாஷிஷ் மக்கிஜா இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள பாலிவுட் படம் ‘காந்தாரி’. இதில் இஷ்வாக் சிங், ஸ்வஸ்திகா முகர்ஜி, மிதா வசிஷ்ட் மற்றும் சாயா கதம் உள்ளிட்டோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம், தன் கடத்தப்பட்ட மகளை தேடும் ஒரு தாயின் போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. செப்டம்பர் 3ம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனிடையே இப்படம் திருட்டு கதை சர்ச்சையில் சிக்கியுள்ளது.

எழுத்தாளர் கல்யாண் பண்டி, ‘காந்தாரி’ கதைக்கும், 2019-ல் அதே தலைப்பில் தான் எழுதி பதிவு செய்த கதைக்கும் ஒற்றுமைகள் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அந்த சமயத்தில் வூட் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் மோனிகா ஷெர்கில் என்பவரிடம் இந்தக் கதையைத் தான் கூறியதாகவும் பின்னர் இழப்பீடு மற்றும் காப்புரிமை கேட்டு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். மும்பையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்களின் இயக்குனர் ருசிகா கபூர் ஷேக் கூறுகையில், “குற்றம்சாட்டப்பட்ட கதையும் எங்கள் கதையும் முற்றிலும் மாறுபட்டது. இந்த விவகாரத்தைப் பெரிதாக நான் விரும்பவில்லை. படம் வெளியாகும் போது உண்மை உங்களுக்கே புரியும்” என்றார்.