பாட்னா: தீபக் மிஸ்ரா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, தமன்னா நடித்த ‘விவான்: போர்ஸ் ஆஃப் தி பாரஸ்ட்’ என்ற இந்தி படம் வெளியான முதல் நாளில் ரூ.8 கோடியும், சனியன்று ரூ.11.25 கோடியும், ஞாயிறன்று ரூ.14.35 கோடியும் வசூலித்து, முதல் வார இறுதியில் மொத்தம் ரூ.33.60 கோடி வசூலித்துள்ளது. தொடர்ந்து திங்களன்று ரூ.5.25 கோடி வசூலான நிலையில், படம் வெளியான 4 நாட்களில் இந்தியாவில் மொத்தம் ரூ.38.85 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது.
இப்படத்தில் வட மாநில மக்களின் பாரம்பரியமான சாத் திருவிழா, சூரிய வழிபாடு தொடர்பான சில உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியிலுள்ள சினி கேலக்ஸி தியேட்டரில் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள், வெளியே தங்கள் செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு, பக்தி பரவசத்துடன் தியேட்டருக்குள் சென்றனர்.
தியேட்டரையே புனித தலமாக கருதி அவர்கள் செருப்புகளை கழற்றி வைத்த காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. இதை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்பட பலர் பகிர்ந்து பாராட்டியுள்ளனர். திரைப்பட காட்சியாக இருந்தாலும் கூட, தங்களது கலாச்சார வழிபாடுகளுக்கு மக்கள் அளிக்கும் இதுபோன்ற மரியாதை கவனத்தை ஈர்த்துள்ளது.
