Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

TN 2026 - திரை விமர்சனம்

கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில் தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் " தங்க நட்சத்திரம் 2026" (TN 2026). தர்புகா சிவா இசையமைப்பில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார். படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தமிழ் தெரியாமல் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவிற்கு வருகிறார் நடிகர் குல்கந்த் குமார் ( நட்டி நட்ராஜ்). தமிழ் உச்சரிப்பு சரியாக வராத வடநாட்டுக்காரராக வரும் குல்கந்த் குமாரை பண்ணையார் மன்றாடியாருக்கு ( தம்பி ராமையா) பிடித்துப் போய் விடுகிறது. தன் சொந்த பணத்தை செலவு செய்து தொடர்ந்து அவரை நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் மன்றாடியார். கொஞ்சம் கொஞ்சமாக தமிழையும் கற்றுக்கொண்டு , மிகப்பெரிய நடிகராக வளர்ச்சி அடைகிறார் குல்கந்த் குமார். பல இடங்களில் சினிமாவை தாண்டி பொது பிரச்சனைகளையும் பேசத் துவங்குகிறார் குல்கந்த். இது அரசியல் கட்சிகளுக்கு பிடிக்காமல் போக அவரை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இதனால் வெறுப்படைந்த குல்கந்த் அரசியலில் இறங்குகிறார். "ஆத்திக நாத்திக முன்னேற்ற கழகம் " என்கிற கட்சி துவங்கி அதற்கு தலைவராக மாறுகிறார்.இப்படிச் செல்லும் கதையில் எதிர்பாராத பல சம்பவங்கள், பிரச்னைகள் நிகழ்கின்றன. முடிவு என்ன என்பது மீதி கதை.

படத்திற்கு மிகப்பெரிய பலம் நடிகராக வரும் நட்டி நட்ராஜ் தான். ஒற்றை ஆளாக மொத்த கதையையும் பிளாஸ்ட் செய்து இருக்கிறார். அக்காலம் இக்காலம் என பல நடிகர்களின் தோற்றத்தில் தோன்றும் நட்டிக்கு அவருடைய நக்கல் பொருந்திய முக பாவனையுடன் பேசும் வசனம் அவருடைய கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு கெட்டப்பிலும் நட்டி தோன்றும் போது அரங்கம் அதிர்கிறது.

படத்துக்கு அடுத்த பலம் தம்பி ராமையா, எம். எஸ் .பாஸ்கர், இளவரசு ஆகிய மூவர் கூட்டணிதான். நல்லா இருக்கும் ஒருவனை சுற்றி இருப்பவர் தான் கெடுப்பார்கள் என்பதற்கு அச்சு அசல் 10 பொருத்தங்களுடன் இருக்கிறார்கள் மூவரும். தம்பி ராமையாவின் உடல் மொழி, எம்.எஸ். பாஸ்கரின் வயதை மீறிய தேர்ந்த நடிப்பு , வசனம் மற்றும் செயல்பாடுகள் , இளவரசு நையாண்டி என கதையின் ஓட்டுநர்களாக விளங்குகிறார்கள் மூவரும். உடன் சாந்தினி, யாஷிகா ஆனந்த், ஷ்ராத்தா, விஜி சந்திரசேகர், ரெடின் கிங்ஸ்லி, ஆண்ட்ரூஸ், இந்திராஜா யோகிபாபு, என இவர்களுடன் பரபர காமெடி மொமென்ட்களாக நகர்கிறது.

முதல் இயக்கமே இப்படி ஒரு காரசாரமான கதையை கையில் எடுத்த இயக்குனர் உமாபதி ராமையாவிற்கு பாராட்டுக்கள். உடன் அப்பாவின் வசனமும் இணைய படம் பல இடங்களில் நம்மையும் அறியாமல் சிரிக்க வைத்து விடுகிறது. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என படம் முழுக்க சொல்லிவிட்டு ஆங்காங்கே பல பெரும் நடிகர்களின் சாயலை தெளித்துவிட்டு சென்றது புத்திசாலித்தனம். அதிலும் பாதுகாப்பாக படக்குழு கேம் ஆடியிருக்கிறார்கள்.

தர்புகா சிவாவின் குல்கந்த் குமார் பாடல் அட்ராசிட்டி, ஹேய் அலங்காரி தர்புகா ஸ்பெஷல் சர்ப்ரைஸ் மெலோடி. பரபரப்பான அரசியல் சூழலுக்கு அவருடைய பின்னணி இசையும் நன்றாகவே கை கொடுத்திருக்கிறது. பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் இடையூறு செய்யும் நீளத்தை மட்டும் எடிட்டர் அரல் தங்கம் இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். மணிவண்ணன், ஆர்.கே செல்வமணி, போன்ற இயக்குனர்களுக்கு பிறகு யாரும் அரசியல் நையாண்டி திரைப்படத்தை காமெடியாக கொடுத்ததில்லை. அரசியல் படம் என்றாலே பக்கம் பக்கமாக வசனம் பேசும் கலாச்சாரம் வேறு அதிகரித்த நிலையில் இந்தப் படம் மிகப்பெரிய ஆறுதலான திரைப்படமாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் காமெடியான நையாண்டி திரைப்படமாக இருந்தாலும் பல இடங்களில் இப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ற படமாகவும் மாறியிருக்கிறது "தங்க நட்சத்திரம் 2026" ( TN 2026).