புகையிலை விளம்பர சர்ச்சையில் திடீர் திருப்பம்: ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் மீது நடவடிக்கை
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா உள்பட புகையிலை பொருட்களுக்கு முழுமையான தடை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தடையை மீறி பான் மசாலா விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், மறைமுகமாக ‘ஏலக்காய்’ என்ற பெயரில் விளம்பரம் செய்யப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சட்டவிரோத மறைமுக விளம்பரத்தில் தோன்றிய பாலிவுட் முன்னணி நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப் ஆகியோருக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அதிரடி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசுக்கு சம்பந்தப்பட்ட 3 நடிகர்களும் விளக்கம் அளித்துள்ள நிலையில், நேரில் ஆஜராக அவகாசம் கேட்ட 2 நடிகர்களிடம், கடந்த செப்டம்பர் 28ம் தேதி துறை ரீதியான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துக்காராம் முண்டே கூறுகையில், ‘சட்டப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்’ என்றார்.
