Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

டாக்ஸிக் விமர்சனம்...

கடந்த 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும், போர்ச்சுகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவாவை கதைக்களமாக கொண்டு காட்சிகள் நகர்கிறது. அப்பகுதியில் நடக்கும் சட்டவிரோதமான போதை பொருள் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வெறியுடன் ராயா என்கிற யஷ், அவரது அக்கா நயன்தாரா ஈடுபடுகின்றனர். அங்குள்ள மாஃபியா கும்பலின் தலைவனின் மகள் தாரா சுதாரியாவுக்கும், ராயாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இந்நிலையில், சர்க்கஸ் கலைஞர் நாடியா என்கிற கியாரா அத்வானிக்கும், ராயாவுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. இதனால் தாரா சுதாரியா கோபப்பட, ராயாவின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது மீதி கதை. திரையில் 194 நிமிடங்கள் ஓடும் இப்படம், ரசிகர்களின் பொறுமையை பலமாக சோதிக்கிறது. 4 வருட இடைவெளிக்கு பிறகு யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம், அவருக்கு மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்திவிட்டது.

முந்தைய ‘கேஜிஎஃப்’ படங்கள் கொடுத்த புகழை அவராகவே கெடுத்துக்கொண்டது போன்ற ராயா, டிக்கெட் ஆகிய கேரக்டர்களின் உருவாக்கம், அவர் மீதான நம்பிக்கையை குறைத்துவிட்டது. மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இப்படத்தை எந்த நோக்கத்துக்காக உருவாக்கினார் என்று பயங்கர குழப்பம் ஏற்படுகிறது. படத்தின் நீளம் நெளிய வைக்கிறது என்றால், அதில் இடம்பெறும் காட்சிகள் அதைவிட முகம் சுளிக்க வைக்கின்றன.

கியாரா அத்வானி உள்பட எந்த பெண்ணை பார்த்தாலும், அவருடன் ராயாவின் படுக்கையறை காட்சிகளை இவ்வளவு விரசமாக எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது. பெண் இயக்குனரின் படத்தில் இடம்பெற்ற அனைத்து பெண் கதாபாத்திரங்களின் மாண்பை, கேரக்டர் உருவாக்கம் என்ற பெயரில் கெடுத்து விட்டார்கள். மது, மாது, துப்பாக்கி சத்தம், ரத்த மழை, சண்டை என்று, படம் முழுக்க வன்முறை காட்சிகள் கோர தாண்டவம் ஆடுகின்றன.

ஒவ்வொரு கேரக்டரும் பேசும் வசனம் முடிவதற்குள், போதுமடா சாமி என்று சொல்ல வைக்கிறது. திரைக்கதை உருவாக்கம் ஏமாற்றத்தை தருகிறது. முதலிலேயே கதையும், ெலாகேஷன்களும் குழப்பிவிடுவதால், படத்தில் முழுமையாக ஒன்றமுடியவில்லை. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் போன்ற ஹீரோயின்கள் பேசுகிறார்கள், அழுகிறார்கள், சண்டை போடுகிறார்கள், இன்னும் என்னென்னவோ செய்கிறார்கள். இதர நடிகர், நடிகைகளும் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.

அம்மாவுக்கும், மகனுக்குமான சென்டிமெண்ட், அப்பாவுடனான மகனின் சென்டிமெண்ட், காதலியுடனான காதலனின் சென்டிமெண்ட் என்று, உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இருந்தாலும், ரசிகர்களின் மனதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எப்போது படம் முடியும் என்று முணுமுணுக்கின்றனர். இது கேங்ஸ்டர் படமா? ஃபேமிலி சென்டிமெண்ட் படமா என்ற குழப்பம் நீடிக்கிறது. வன்முறை மற்றும் விரசம் நிறைந்த காட்சிகளால், கதையின் நோக்கம் யாருக்கும் போய் சேரவில்லை. கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு சற்று ஆறுதல். ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரின் பின்னணி இசை ஓவர் பில்ட்-அப். கலை இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள், மேக்கப் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் உழைப்பை ஒட்டுமொத்தமாக வீணடித்திருக்கிறது படம். இதை ெபாறுமையாக பார்க்க முடியாது. முன்னதாக கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ‘ஜன நாயகன்’ என்ற படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், தற்போது ‘டாக்ஸிக்’ படமும் பான் இந்தியா அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. மொத்தத்தில் ‘டாக்ஸிக்’ - குப்பை.