பிறப்பு முதல் இறப்பு வரை, பணம் இருந்தால் மட்டுமே எல்லாமும் நடக்கும் என்று சொல்பவர், ஆம்புலன்ஸ் டிரைவர் பஹத் பாசில். பணத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார். ஒருவரை ஏமாற்றும் போது தாதா மஞ்ச்ரேகரிடம் சிக்குகிறார். அவர் உயிருடன் திரும்ப வேண்டும் என்றால், இரண்டு நாட்களில் தனக்கு 25 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தாதா கட்டளையிடுகிறார். இதையடுத்து பணக்கார வீட்டு சிறுமி சாரா பலேகரை பஹத் பாசில் கடத்துகிறார். ஆனால், சாரா பலேகர் ஒரு பேய்.
இந்த விஷயம் சாரா பலேகருக்கே தெரியாது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. இது வழக்கமான அம்புலிமாமா கதை. பஹத் பாசில் தன்னால் முடிந்த அளவுக்கு வித்தியாசமாக நடித்து படத்தை கரை சேர்க்க முயற்சித்துள்ளார். அவருக்கும் பேய் என்று தெரியாது, சாரா பலேகருக்கும் தான் ஒரு பேய் என்று தெரியாது. மகேஷ் மஞ்ச்ரேகர், சவுரப் சச்தேவா, வெங்கடேஷ் ககுமானு, சுப்பராஜு, திவ்யா பிள்ளை, எஸ்.எஸ்.ஷஷாங்க் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கால பைரவா பின்னணி இசை, தொடக்கம் முதல் இறுதிவரை ஒரே சாயலில் இருப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. பேயை கடத்திவிட்டார் என்பது ஓ.கே. ஆனால், அந்த பேயை வைத்து ஹீரோ நல்லது செய்தாரா என்பது கேள்வி. இதை பொழுதுபோக்கு படமாக உருவாக்க நினைத்த இயக்குனர் ஷஷாங்க் யேலெட்டி, அதில் கோட்டை விட்டுவிட்டார். பிராட் பிரான்சிஸ் ஒளிப்பதிவு, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் உதவி செய்துள்ளன. மோகன்நாத் பிங்கி, சந்தீப் ஸ்வர்ணா அரங்க அமைப்பு கள் வியக்க வைக்கின்றன. சாரா பலேகரின் நடிப்புக்காக சிறுவர், சிறுமியர் பார்க்கலாம்.
