சென்னை: ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா தம்பதி சமீபத்தில் இந்தி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தங்களுடைய காதல் மற்றும் திருமணம் குறித்து பேசினர். அதில் அவர்களது சில கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, திருமணம் செய்துகொள்ள ராஷ்மிகா தன்னிடம் 100 முறை கேட்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா கூறிய கருத்து பேசுபொருளானது. இதனால் விஜய் தேவரகொண்டா ஆணாதிக்க மனநிலை கொண்டிருப்பதாக பல பெண்கள் அவரை விமர்சித்தனர். இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா மந்தனா தனது சோஷியல் மீடியாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கும் விஜ்ஜுக்கும் (விஜய் தேவரகொண்டா) இடையிலான இந்த விவகாரம் குறித்த தேவையற்ற கருத்துகள், விமர்சனங்கள், கேட்கப்படாத அறிவுரைகள் என தொடர்ந்து குவிந்து வருகிறது. நான் முழுக்க முழுக்க உணர்வுகளால் இயங்குபவள். எங்களை பொறுத்தவரை, திருமணம் என்பது ஒருபோதும் காதலை வெளிப்படுத்தும் ஒரு முன்மொழிவை பற்றியதோ, ஒருவரின் முன் மண்டியிட்டு மோதிரம் அணிவிப்பதை பற்றியதோ அல்ல. அவையெல்லாம் வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமே. எங்களை பொறுத்தவரை, ஒன்றாக இணைந்து ஒரு வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதுதான் முக்கியம்.
இதுவரை நாங்கள் அதை அழகாக செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். என் கணவர் மீது எனக்கு அளவுகடந்த காதல் இருக்கிறது. நான் திருமணம் செய்துகொள்ளும் ஆணை காதலிக்கவில்லை என்றால், வேறு எதற்காக அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்? அவர்தான் என் வாழ்நாள் துணையாக இருக்கப் போகிறார். சாதாரண நாட்களிலும் அசாதாரணமான தருணங்களிலும் எனக்கு துணையாக இருக்கும் நண்பர். என் குழந்தைகளின் தந்தை. நான் முதுமை அடையும் வரை என்னுடன் வாழப்போகும் மனிதர். நான் அவரையே ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன். பெண்ணியம் பெயரில் கேலி, கிண்டல்கள் வேண்டாம்.
