சென்னை: கடந்த 2013ம் ஆண்டு நவீன் இயக்கி முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம் ‘மூடர் கூடம்’. தற்போது அப்படத்தின் 2ம் பாகம் ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. முதல் பாகத்தை போன்று வித்தியாசமான கேரக்டர்கள், கதை சொல்லும் முறை, டார்க் ஹியூமர், அதிரடி, கற்பனை மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் சர்வதேச அளவிலான கதைக்களத்தில் 2ம் பாகம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய நவீன் 2ம் பாகத்தையும் எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் ஓவியா, சென்ட்ராயன், ராஜாஜி, குபேரன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிராண்டல் பிக்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, சம்கித் போஹ்ரா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், பனியால் மூடப்பட்டுள்ள ஒரு பகுதியில் படத்தின் முக்கிய 4 கேரக்டர்கள் ஆயுதம் ஏந்தி தயாராக நிற்கிறார்கள்.
அவர்களுடன் ஹேப்பி லைஃப் என்ற வாசகத்துடன் டெடி பியர் ஒன்றும் உள்ளது. இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்க குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
படம் குறித்து நவீன் பேசுகையில், ‘என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் ‘மூடர் கூடம்’. பல ஆண்டுகளாக, இதன் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் என்னிடம் கேட்டு வந்தனர். வெறுமனே 2ம் பாகத்திற்காக நான் இப்படத்தை உருவாக்கவில்லை. ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தும் ஒரு கதையை தேடிக்கொண்டிருந்தேன். ரசிகர்கள் விரும்பிய நகைச்சுவை, கதாபாத்திரங்கள், கதை சொல்லலையும் இன்னும் பெரிய அளவுக்கு கொண்டு சென்றுள்ளோம்’ என்றார்.
