மும்பை: நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், கடந்த காலத்தில் தான் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாக சென்றதாகவும், ஆனால் சட்டப்பூர்வ திருமணம் மற்றும் பிரமாண்டமான திருமண செலவுகள் குறித்து தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாலிவுட் நடிகை சோஹா அலிகான் நடத்தும் பாட்காஸ்டில் பேசிய ஸ்ருதிஹாசன் கூறியதாவது:
சில விஷயங்களில் நான் மிகவும் பாரம்பரியமான எண்ணம் கொண்டிருந்தாலும், திருமணத்தை ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தமாக பார்ப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. துணையை தேர்வு செய்து வாழ்வதே எனக்கு முக்கியம். இன்றைய காலக்கட்டத்தில் திருமண விழாக்களுக்கு செலவிடப்படும் மிகப்பெரிய தொகைகள் குறித்து எனக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது.
இந்த அளவுக்கு செலவு செய்வது யாருக்காக? அதற்கு பதிலாக, அந்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கலாம். எதிர்காலத்தில் நான் ஒரு தாயாக இருக்க விரும்புகிறேன். குழந்தையை தத்தெடுப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். அதேவேளையில், உயிரியல் ரீதியாகவும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் எனக்கு இருக்கிறது.
