ரிஷிகாந்துக்கு பெற்றோர் பார்த்த பெண், அனிஷ்மா அனில்குமாருடன் திருமணம் நடக்கிறது. முதலிரவு அன்று தனது காதலன் ராஜா கருப்பசாமியுடன் ஓடுவதற்காக, ஊர் எல்லையிலுள்ள கோயிலில் காத்திருக்கிறார் அனிஷ்மா. இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. இதன் விளைவே படம். பெண்ணடிமை, ஆணாதிக்கம், சாதி பிரச்னை, ஆணவக்கொலை, திருமண கலாட்டா, குடும்ப மோதல் என்று, முதல் படத்திலேயே இயக்குனர் ராஜா கருப்பசாமி, மறைந்த கே.பாக்யராஜின் ஸ்டைலை பின்தொடர்ந்து இருக்கிறார்.
சில நேரங்களில் அதுவே ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள், அடிக்கடி ஏற்படும் மோதல்கள் என்று, படம் முழுவதும் பேசிக்கொண்டே இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகளால் படத்தின் விறுவிறுப்பு காப்பாற்றப்படுகிறது. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் ஜோடி, மேலும் சில படங்களில் கூட்டணியை தொடரலாம்.
சாமியாடியாக சேத்தன், காதலனாக ராஜா கருப்பசாமி, அலப்பறை ஆசாமிகள் அப்துல் லீ, பக்ஸ் மற்றும் ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், ஏ.வெங்கடேஷ், வர்ஷினி கார்மேகம் நேர்த்தி நடிப்பு தந்துள்ளனர். பரத் சங்கரின் பாடல்களும், பின்னணி இசையும் இதம். ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி, காட்சிக்குள் நம்மை கட்டிப்போடுகிறார். பிற்பகுதியில் வரும் காட்சிகள் அழுத்தமாக இல்லை. அடுத்தடுத்த காட்சியை எளிதில் கணிக்க முடிகிறது.
