சென்னை: ராம் எழுதி இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் இன்று திரைக்கு வருகிறது. நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராம் உருக்கமாக பேசியதாவது: கடந்த 2007 அக்டோபர் 6ம் தேதி, நான் முதல்முறையாக எழுதி இயக்கிய ‘கற்றது தமிழ்’ என்ற படம் திரைக்கு வந்தது.
வரும் 6ம் தேதியுடன் நான் திரையுலகிற்கு வந்து 19 வருடங்களை நிறைவு செய்து, 20வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். பிறகு ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘பறந்து போ’, ‘ஏழு கடல் ஏழு மலை’ என்று, 19 ஆண்டுகளில் 6 படங்களை மட்டுமே எழுதி இயக்கியுள்ளேன். சில படங்களில் நடித்திருக்கிறேன். இத்தனை வருடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான படங்களை மட்டுமே இயக்கியுள்ளது பற்றி நான் வருத்தப்படவில்லை. எனக்கென்று ஒரு பாதையை, பாணியை தேர்வு செய்து இயக்கி வருகிறேன்.
அதற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகம், மீடியா மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் கதை எலி, யானை, மரம், புல் ஆகியவற்றை பற்றியும் பேசுகிறது. பொதுவாக இந்த புவி, மனிதர்களுடன் வாழும் அனைத்துக்கும் சொந்தமானது என்பதை எனது கற்பனைக்கு ஏற்ற வகையில், மிகவும் சுவாரஸ்யமாக விவரிக்க முயற்சி செய்துள்ளேன். கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்கும். அடுத்து ஆக்ஷன் திரில்லர் கதையை எழுதி இயக்குகிறேன். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
