புவனேஸ்வர்: மேற்கு ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்பூரி நடிகையும், பக்தி பாடகியுமான ஜாஸ்மின் மாஜி (22), கடந்த 25ம் தேதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சம்பல்பூர் மாவட்டம் புர்லாவில் இருக்கும் விம்சார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் ஒடிசா மாநிலம் பலாங்கிர் மாவட்டம் கப்ராகோல் பகுதியை சேர்ந்த சாது மெஹர், அகல்யா தம்பதியின் ஒரே மகன் பிரேம் மெஹர் (25), மேற்கு ஒடிசா பகுதியில் புகழ்பெற்ற சம்பல்பூரி ஆல்பம் பாடல்களில் நடனமாடி, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இளம் கலைஞர்களின் திடீர் மறைவு, அப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இந்த விபரீத மரணங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளன.
