நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன் தம்பதி மகன் ஸ்ரீகாந்த், ஐடி கம்பெனியில் வேலை பார்த்து கைநிறைய சம்பாதிக்கிறார். எனினும் அவருக்கு போதும் என்ற மனம் இல்லை. எனவே, தனக்கு வரும் மனைவி வேலைக்குச் சென்று, தன்னைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். இதனால், அவருக்குப் பார்க்கும் பல பெண்களை நிராகரிக்கிறார். இந்நிலையில் ஒரு பொய்யைச் சொல்லி சிந்தியா லூர்டேவை அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் அதன் பிறகு நடப்பதே மீதி கதை.
சொந்தங்களை விட பணம் பெரிதல்ல என படத்தை இயக்கியுள்ளனர் ஜி.சங்கர், தினேஷ் தீனா. மிடில் கிளாஸ் இளைஞன் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ள ஸ்ரீகாந்த், மனைவியை வெறுப்பதிலும், பிறகு அவரை நேசிப்பதிலும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். அவரது தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர், அறிவுரை சொல்லி நீளமான டயலாக்கைப் பேசி அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். மீரா கிருஷ்ணன், வினோதினி வைத்தியநாதன் சிறப்பான நடிப்பு. சிந்தியா லூர்டே சமையல் செய்யும் காட்சி, வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. மற்றும் ராதாரவி, சாந்தினி தமிழரசன், கேபிஒய் சரத், பிரேம்ஜி, சாம்ஸ் ஆகியோரும் இயல்பு. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு நேர்த்தி. பின்னணி இசையின் கிங் இளையராஜா, இதிலம் மனதை ஆட்கொள்கிறார். முற்பகுதியில் இருந்த விறுவிறுப்பு பிற்பகுதியில் இல்லை. பேமிலி டிராமா மூலம் பாடம் நடத்தி இருக்கிறார்கள்.