அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் 12 பேர், தாங்கள் சிறியவர்கள் இல்லை; இந்த உலகைப் பற்றி நன்கு தெரிந்த பெரியவர்கள் என்று பெற்றோர் களுக்குப் புரிய வைக்க முடிவு செய்கின்றனர். அப்போது ஒரு சிறுமி, தனது பாட்டி வசிக்கும் கிராமத்தின் அழகையும், அங்கு பேய் இருப்பதையும் சொல்கிறார். பேயை நேரில் பார்க்க முடிவு செய்யும் 12 பேர், பள்ளி வகுப்பை ‘கட்’ அடித்து, இன்னொரு சிறுவனுடன் பேருந்தில் கிராமத்தை நோக்கிச் செல்கின்றனர்.
அப்போது ரோட்டில் நடக்கும் போராட்டம் காரணமாக, பேருந்து செல்லாது என்று போலீசார் சொல்கின்றனர். பிறகு ஒரு ஆட்டோ டிரைவரும் கைவிரித்ததால், காட்டுப்பாதையைத் தேர்வு செய்து 13 பேரும் நடந்து செல்கின்றனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக மாயமாகின்றனர். அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயம் என்ன? அந்த 13 பேரும் உயிருடன் வீடு திரும்பினார்களா என்பது மீதி கதை.
இப்படத்தில் நடித்துள்ள விஷ்ருதா, டி.அம்ருதா, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, டி.ஜான் போஸ்கோ, சில்வென்ஸ்டன், பிரஷிதா, தீபேஷ்வரன், உதய்பிரியன், கே.எஸ்.தீபன், ரோஷன், எல்.ஏ.ரிஷி ரத்னவேல், அஸ்மிதா மகாதேவன் ஆகியோர் நடிப்பு, வசன உச்சரிப்பு, பாடிலாங்குவேஜில் அசத்தியுள்ளனர். தனது பாணியில் இருந்து விலகி எழுதி இயக்கியுள்ள பார்த்திபன், நாசா விஞ்ஞானியாக நச்சென்று ‘பன்ச்’ பேசி நடித்துள்ளார். சிறுவர், சிறுமிகளின் பெயர்களை வைத்து ஒரு பாடலாக்கி, அதில் அவர்களது குணாதிசயம் பற்றி சொன்ன விதம் சூப்பர்.
தவிர, சுடுகாட்டில் தனது மனைவி புதைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து, அந்த 13 பேரையும் யோகி பாபு பயமுறுத்தி இருக்கிறார். கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு, காட்சிகளைப் பரபரப்பாக்க உதவி இருக்கிறது. விஎஃப்எக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஏலியன் வாகனம் ஈர்க்கிறது. எதிர்காலத்தில் அந்த ஏலியன் உலகில் மனிதர்கள் குடியேறலாம் என்ற கற்பனை வியக்க வைக்கிறது. இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் விறுவிறுப்பு. விஞ்ஞான பாணி கதைக்கு திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கலாம். இளம் ஜோடியின் காதல் காட்சி நெருடலாக இருக்கிறது.