யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நூலகர், தமிழ் ஓலைச்சுவடிகளையும் மற்றும் படைப்புகளையும், நூல்களையும் பாதுகாக்க முயற்சிக்கிறார். அவரது செயலுக்கு தடை ஏற்படுகிறது. இந்நிலையில், அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்கின்றனர். நூலகரின் மகன் அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறார். அங்கு கல்லூரியில் படிக்கும் சில இளைஞர்களை தனது வீட்டிலேயே தங்க வைத்திருந்த நூலகருக்கு அவர்களால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருக்குமோ என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், நூலகரின் உடலுக்கு இளைஞர்கள் இறுதிச்சடங்கு செய்யும் போது சில தவறுகள் நடந்துவிடுகிறது. இதை அறிந்த நூலகரின் நண்பர் எச்சரிக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்களை அடுத்த தலைமுறையினருக்கு பொக்கிஷமாக கொடுக்க வேண்டும் என்று முயற்சிக்கும் நூலகர், யதார்த்தமாக நடித்துள்ளார். நூலகரின் நண்பராக வருபவரின் நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது. தமிழருவி சிவகுமார், ஏழுமலைப்பிள்ளை மதிசுதா, கில்மன், கஜன் தாஸ், ஆகாஷ், கே.நஜாத், எல்,பிரகாஷ், கஜன் விஜயநாதன், கதிர் சினி, சபேசன், ஆர்.கே.கஜா ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். அவர்கள் பேசும் இலங்கை தமிழ், மனதை பெரிதும் கவர்கிறது.
தமிழின் தொன்மையை பாதுகாக்க துடிக்கும் கதையை, ஒரு கமர்ஷியல் படத்துக்கான அம்சங் களுடன் ராஜ் சிவராஜ் இயக்கியுள்ளார். பூவன் மதீசன் எழுதிய கதைக்கு ராஜ் சிவராஜ், பூவன் மதீசன், அருண் யோகதாசன் திரைக்கதை எழுதியிருக்கின்றனர். ஏ.கே.கமல் ஒளிப்பதிவு செய்ய, பூவன் மதீசன் இசை அமைத்துள்ளார். இலங்கையில் வெளியான இப்படம், விரைவில் தமிழ்நாட்டிலும் தணிக்கை செய்யப்பட்டு திரைக்கு கொண்டு வரப்படுகிறது.