நடிகர் ஜூனியர் என்டிஆரின் ‘தேவரா’ படம் உலகளவில் ரூ. 304 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில், மாஸ் நாயகன் என்டிஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ’தேவரா’. என்டிஆர் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரி கிருஷ்ணா கே தயாரித்த இந்தப் படத்தை நந்தமுரி கல்யாண் ராம் வழங்கினார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 172 கோடி வசூலை ஈட்டி பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றது.
வார இறுதியிலும் இதை தக்க வைத்தது. படம் வெளியான மூன்று நாட்களில் அனைத்து மொழிகளிலும் சுமார் ரூ. 304 கோடிகளை வசூலித்து குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. குறிப்பாக, ‘தேவரா’ படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மொத்த வசூலில் ரூ. 87.69 கோடி தெலுங்கிலும் மற்ற மொழிகளிலிருந்து மீதம் உள்ள வசூலும் வந்துள்ளது. குறிப்பாக இந்தியிலும் வெளியாகி இருக்கும் இந்தப் படம் மெல்ல மெல்ல பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது.
படம் வெளியான நாளில் இருந்து, இப்போது நான்காவது நாள் வரையிலுமே மாலை காட்சிகளும் திரையரங்குகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் மூலம் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, அஜய், கெட்அப் ஸ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவாளராகவும், சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ’தேவரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகியுள்ளது.