சென்னை: தில் ராஜா’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் படத்தில் விஜய் சத்யாவுக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருக்கிறார். காமெடி வேடத்தில் கே.பி.ஒய் பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். படம் குறித்து விஜய் சத்யா கூறும்போது, ‘நடுத்தர குடும்ப இளைஞனாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். எதிர்பாராமல் நடக்கும் ஒரு மோதல், எதிர் முனையில் இருப்பவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் என்னவாகும்? அதன் மூலம் நாயகனுக்கும், அவனது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள், என்பதை முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் படமாக மட்டும் இன்றி சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் சொல்லியிருக்கிறார்.
நல்ல கதைக்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது, அதனால் தான் நான் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது அதற்கான பலன் தான் ஏ.வெங்கடேஷ் சார் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ அதை தான் நான் செய்திருக்கிறேன். அவர் பல வெற்றிகளை பார்த்தவர், நான் வெற்றிக்காக காத்துக்கொண்டிருப்பவன், அதனால் வெங்கடேஷ் சாரிடம் நான் சரணடைந்து விட்டேன். அவர் சொல்வதை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் செய்திருக்கிறேன்’ என்றார்.