சென்னை: இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி நடிகை சுசித்ரா கூறிய கருத்துக்கு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் யூடியூபுக்கு சுசித்ரா ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கே.பாலசந்தரை இயக்குனர் சிகரம் என்கிறார்கள். ஆனால் அவர் காமம் பிடித்தவராக இருந்தார். சாகும் வரையிலும் அதுபோலத்தான் அவர் இருந்தார். அந்த மாதிரியான குணாதிசயம் கொண்டவர்கள் கடைசி வரை அப்படித்தான் இருப்பார்கள் என காட்டமாக பேசியிருந்தார். இது தொடர்பாக யூடியூப்புக்கு அளித்த பேட்டியில் சுசித்ரா கூறியது: சாகுற வரைக்கும் கே பாலச்சந்தர் Lusty man. இந்த மாதிரி ஆட்கள் சாகும் வரை இப்படி தான் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். பெண்களை அவர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார். பெண்களிடம் அவர் தவறாக நடந்துள்ளார்.
அவர் சாகும் வரை காமம் பிடித்தவராகவே இருந்தார். சினிமா துறையில் இதுபோல் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பலருக்கும் தெரியும். சிலர் என்னையே தனியாக அழைத்திருக்கிறார்கள். ஆனால் நான் அதுபோல் போனதில்லை. ஒருவர் பண்ணை வீட்டுக்கு வரும்படி போனில் அழைத்தார். அந்த போன் அழைப்பை நான் உடனே கட் செய்துவிட்டேன். இவ்வாறு சுசித்ரா கூறினார். இந்நிலையில் இது குறித்து தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்த்திரை உலகில் என்றும் அழிக்க முடியாத புகழையும், திரை உலகினர் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் அனைவராலும் மதிக்க கூடிய போற்றக்கூடியவராக மிகப்பெரிய சாதனை புரிந்து மறைந்தவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.
தேசிய விருது, கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே போன்ற மிகப்பெரிய விருதுகளை பெற்று தமிழ் திரை உலகிற்கே பெருமை சேர்த்தவர் பாலச்சந்தர். அவரின் புகழை கெடுக்கும் வண்ணம் தற்பொழுது பாடகி சுசித்ரா, பாலசந்தரை பற்றி அவதூறாகவும், அவர் புகழை களங்கப்படுத்தும் விதமாகவும் ஒரு பேட்டி கொடுத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். யாரும் யாரையும் மனம் போன போக்கில் விமர்சனம் செய்வது மிகவும் தவறான செயலாகும். இது தொடராத வண்ணம் தடுத்து நிறுத்துவது திரைப்பட உலகில் உள்ள அனைவரின் பொறுப்பாகும். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களை பேட்டி என்ற பெயரில் அவரின் புகழை களங்கப்படுத்திய பாடகி சுசித்ரா அவர்களை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.