மும்பை: எனது தொடையில் இயக்குனர் கிள்ளி, அத்துமீறினார் என நடிகை மலாய்க்கா அரோரா பகீர் புகார் கூறியுள்ளார். இந்தியில் பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் மலாய்க்கா அரோரா. மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘உயிரே’ படத்தில் ‘தக்க தைய்யா தைய்யா’ பாடலுக்கும் ஆடியிருந்தார். இவர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை காதல் திருமணம் செய்து பிறகு விவாகரத்து செய்தார். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அர்ஜுன் கபூர். அவருடன் மலாய்க்கா வாழ்ந்து வந்தார். பிறகு அவரையும் பிரிந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் சந்தித்த பாலியல் துன்புறுத்தல் குறித்து மலாய்க்கா கூறும்போது, ‘‘ஒரு படத்தில் நடிக்க கதை சொல்ல வந்த இயக்குனர் ஒருவர், என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசினார். பின் திடீரென என தொடையில் கிள்ளினார். உடனே அங்கிருந்து கோபத்துடன் எழுந்த நான், அவரை வெளியேறும்படி சொன்னேன். இல்லாவிட்டால் போலீசில் புகார் அளிப்பேன் என்றதும் அந்த இயக்குனர் ஓடிவிட்டார். அவர் பிரபல தயாரிப்பாளரின் மகன். அந்த தயாரிப்பாளர் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. அதனாலேயே இயக்குனரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை’’ என்றார்.