தன் காதலி மானசா சவுத்ரி ஏமாற்றியதால் போதைக்கு அடிமையான அதர்வா முரளி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில், அதீத குணங்களால் மனநிலை குன்றியவர் போல் காணப்படும் நிமிஷா சஜயனுக்கும், அதர்வா முரளிக்கும் இருவீட்டு பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். மருத்துவமனையில் மகனை பெற்றெடுக்கும் நிமிஷா சஜயன், மயக்கத்தில் இருந்து மீள்கிறார். அப்போது அவரிடம் கொடுக்கப்படும் குழந்தை மாறிவிடுகிறது. ‘எங்கே என் குழந்தை?’ என்று கேட்கிறார். அனைவரும் அதிர்கின்றனர். போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். வழக்கு கோர்ட்டுக்கு செல்கிறது. அதர்வா முரளி குழந்தையை தேடி அலைகிறார். அப்போது நெஞ்சை உறைய வைக்கும் திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகிறது. இறுதியில் குழந்தை கிடைத்ததா? இதற்கு பின்னால் மறைந்துள்ள சதி என்ன என்பது, மனதை கனக்கச் செய்யும் கிளைமாக்ஸ்.
போதைக்கு அடிமையாகி, வாழ்க்கையில் பாதை மாறி பயணிக்கும் அதர்வா முரளிக்கு இது திருப்புமுனை படம். மனைவியிடம் நேசம், குழந்தையிடம் பாசம், காணாமல் போனதை தேடுவதில் ஆவேசம் என்று, நடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் நன்றாக ‘அடி’த்துள்ளார். சரிதா, சுஹாசினி கலந்த கலவையாக, வித்தியாசமான மனநிலை கொண்ட நடிப்பில் நிமிஷா சஜயன் ஸ்கோர் செய்துள்ளார். குழந்தை மாறிய பிறகான அவரது நடிப்பு, பெண்களுக்கு கண்ணீரை வரவழைக்கும். திவ்யா அன்ட் ஆனந்த் என்பதே DNA. நேர்மையான போலீஸ் பாலாஜி சக்திவேல், அதர்வா முரளியின் அப்பா சேத்தன், நண்பர் ரமேஷ் திலக், டாக்டர் ரித்திகா, விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட், கருணாகரன், சுப்பிரமணியம் சிவா ஆகியோரும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளனர். ‘கயல்’ பாட்டி சாந்தகுமாரியின் நடிப்பும், வசனமும் வீரியமானவை.
பார்த்திபன் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. சத்யபிரகாஷ், காந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 இசை அமைப்பாளர்களின் பாடல்களில் தனித்துவம் தெரிகிறது. ஜிப்ரான் பின்னணி இசை, கதையின் நகர்வுக்கு பலம் சேர்த்துள்ளது. பெரிய லாஜிக் ஓட்டைகள் இல்லை. ஒரு பாடலுக்கு காயத்ரி சங்கர் ஆடியது, கதையின் ஓட்டத்துக்கு பிரேக் மாதிரி இருக்கிறது. குழந்தைகளை கடத்தும் கும்பல் எப்படி, யாருக்காக செயல்படுகிறது என்பதை தெளிவாக சொல்லி, ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மருத்துவமனையில் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய இயக்குனர் நெல்சன் வெங்கடேசனுக்கு பாராட்டுகள்.