சென்னை: ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், நெல்சன் வெங்கடேசன். பிறகு எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடித்த ‘மான்ஸ்டர்’, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘ஃபர்ஹானா’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது ‘டிஎன்ஏ’ என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில் அதர்வா இரட்டை வேடம் ஏற்றுள்ளார். அதர்வா ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்துக்கு சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகிய 5 பேர் இணைந்து இசை அமைக்கின்றனர். ஏற்கனவே ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்துக்கும் 5 பேர் இணைந்து இசை அமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.