நட்சத்திர காதல் தம்பதிகள் டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவாத்மிகா ராஜசேகர் தெலுங்கில் அறிமுகமானார். பிறகு தமிழில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’, ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அர்ஜூன் தாஸ் ஜோடியாக அவர் நடித்துள்ள படம், ‘பாம்’. முக்கிய வேடங்களில் காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, கிச்சா ரவி, பூவையார், சில்வென்ஸ்டன், ரோஹன், காவ்யா நடித்துள்ளனர். ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளனர்.
பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் இணைந்து கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். பி.எம்.மகிழ்நன் வசனம் எழுத, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘கதைக்களத்துக்காக ஆர்ட் டைரக்டர் மனோஜ் குமார் ஒரு கற்பனை உலகை செட் போட்டார். அதிலுள்ள ஒரு ஊரில் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு தரப்புக்கும், நம்பிக்கை இல்லாத மற்றொரு தரப்புக்கும் பிரச்னை ஏற்படுகிறது.
இதில் தலையிடும் அர்ஜூன் தாஸ், காளி வெங்கட் ஆகியோர், பிரிந்த ஊர்களை எப்படி இணைக்கின்றனர் என்பது திரைக்கதை. டார்க் காமெடி படமான இதற்கும், ‘பாம்’ என்ற தலைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்’ என்றார்.