மனிதர்களின் மூளையில் சுரக்கும் ஹார்மோனின் பெயர் டோபமைன். நமது அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷமான விஷயங்களை மீண்டும், மீண்டும் நினைக்க வைப்பது இந்த ஹார்மோனின் பணி. இன்றைய நமது சமூகத்தில் ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகளை யாராலும் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது. பாரபட்சமின்றி அனைத்து வயதினரையும் அடிமையாக்கிய டிஜிட்டல் உள்ளடக் கங்கள், மக்களின் வாழ்க்கையை எப்படிச் சீரழிக்கிறது என்பதை முழுநீள கிரைம் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் படம், ‘டோபமைன் @ 2.22’. அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பிற்பகல் 2.22 மணிக்கு ஒரு கொலை நடக்கப்போகிறது என்று முதலிலேயே சொல்லி விடுகின்றனர். அது எப்படி, யாரால் நடக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை இருக்கிறது. அதை வெவ்வேறு கோணத்தில் அணுகி கதையை நகர்த்திச் செல்லும் மதுசூதனன் (இயக்குனர் திரவ்), சூதாட்டத்துக்கு அடிமையாகி, தன்
நண்பர்களுக்கு போன் செய்து பணத்தைக் கடன் கேட்கும் கேரக்டரில் இயல்பாக நடித்து உள்ளார். காதல் முறிவுக்குப் பிறகும் காதலனின் தொல்லைக்கு ஆளாகும் நிகிலா சங்கர் சிறப்பாக நடித்துள்ளார். மகேஷ் கேரக்டரில் வரும் விஜய் டியூக், அவரது மனைவியாக வரும் விபிதா இருவரும் ரீல்ஸ் ஆர்வலராக அலப்பறை செய்துள்ளனர். ராகவ், சாம்சன், சத்யா, சக்திவேலன் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
திரைக்கு வந்த ‘வெப்பம் குளிர் மழை’ என்ற படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த திரவ், ‘டோபமைன் @ 2.22’ படத்தை விறுவிறுப்பாகவும், சஸ்பென்சுடனும் இயக்கி நடித்து, பாடல்களை எழுதி எடிட்டிங் செய்துள்ளார். ஆபாச வீடியோவுக்கு அடிமையான சில இளைஞர்கள், ஒரு இளைஞியின் கதை மூலம் சமூகத்தை நோக்கி சாட்டையை விளாசியிருக்கிறார். பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, ஆலன் ஷோஜியின் இசை படத்துக்கு பலம் சேர்க்கின்றன. சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.