சென்னை: விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், ‘கடல்’ படத்தில் கவுதம் கார்த்திக்கின் தாயாகவும் நடித்தவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி பேசும் போது, ‘நாடகக் கலையை விடாமல் இன்னும் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நடித்த அனைவரும் ஒன்றிரண்டு வேஷங்களில் நடித்தது சுலபமான விஷயம் இல்லை. ஒரே ஷாட் நடித்துவிட்டு, எனக்கு அசதியாக இருக்கிறது என கூறிய பல நடிகர்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நேரம் எந்த தொய்வும் இன்றி நடித்த அனைவருக்கும் உண்மையில் பாராட்டுக்கள். இந்த கலைகளை வளர்த்து வரும் தேவிக்கு வாழ்த்துக்கள். இந்த கலை இன்னும் உயர வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும். அழியாது’ என்றார்.