திருவனந்தபுரம்: கொல்லம் அருகே பிரபல மலையாள நடிகை ஷம்நத் தனது வீட்டில் எம்டிஎம்ஏ போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் நடிகையை கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஷம்நத் என்ற பார்வதி (36). பிரபல மலையாள டிவி நடிகையான இவர், ஏராளமான டிவி தொடர்களிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். ஷம்நத் தற்போது பரவூர் அருகே உள்ள சிறக்கரை பகுதியில் தனது கணவனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஷம்நத்தின் வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக பரவூர் இன்ஸ்பெக்டர் தீபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் ஷம்நத்தின் வீட்டில் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டிலிருந்து 4 கிராம் எம்டிஎம்ஏ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் ஷம்நத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். போதைப்பொருளை பயன்படுத்துவதற்காக ஷம்நத் வாங்கினாரா அல்லது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தாரா என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.மேலும் அவருக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது? யார் கொடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
