சசிகுமார் நடித்துள்ள ‘பிரீடம்’ என்ற படத்தை ‘கழுகு’ சத்யசிவா எழுதி இயக்கியுள்ளார். லிஜோமோல் ஜோஸ், சதீஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், பேராசிரியர் மு.ராமசாமி நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வரும் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சசிகுமார் கூறுகையில், ‘கடந்த 1995ல் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ‘பிரீடம்’ படம் உருவாகியுள்ளது. தற்போது மிகவும் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறேன். ஏற்கனவே நான் நடித்திருந்த ‘நந்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களின் வரிசையில் ‘பிரீடம்’ படம் இடம்பெறும்.
1995 ஆகஸ்ட் 14ம் தேதி சிறையில் இருந்து தப்பியோடிய இலங்கை அகதிகளை பற்றிய சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. இது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு முன்பே தொடங்கிய படம்’ என்றார். சத்யசிவா கூறும்போது, ‘உண்மை சம்பவத்தில் சசிகுமார் ஈழத்தமிழர் வேடத்தில் நடித்துள்ளார். தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய ஒரு விஷயம் பலருக்கு தெரியவில்லை. அது என்ன நிகழ்வு, நான் எதுகுறித்து பேசுகிறேன் என்பது படம் வெளியான பிறகு தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை குடும்பத்தின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதை விவரித்துள்ளேன். செய்யாத தவறுக்காக சிறைக்கு செல்பவர்களின் வேதனையும், மன வலியும் எவ்வளவு கொடுமையானது என்பது தொடர்பான புரிதலை இப்படம் ஏற்படுத்தும்’ என்றார்.