நேர்மையும், திறமையும் கொண்ட போலீஸ் உயரதிகாரி நவீன் சந்திரா, நகரில் தொடர்ந்து சிலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, பிறகு உடல்கள் எரிக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்கிறார். வழக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், இந்த படுகொலைகளை செய்து வரும் மர்ம நபர் பற்றிய விவரம் வெளியாகி அதிர வைக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. போலீசுக்கான கம்பீரத்துடன் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ள நவீன் சந்திரா, சண்டைக் காட்சிகளில் ஆவேசமாக அடித்திருக்கிறார். காதலும், டூயட்டும் இல்லை. ரியா ஹரி, சஷாங்க், ‘வத்திக்குச்சி’ திலீபன், அபிராமி, அர்ஜெய், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
பிளாஷ்பேக் காட்சிகள் படத்துக்கு மிகப்பெரிய பலம். எதற்காக மர்ம நபர் சைக்கோ கில்லராக மாறினார் என்பதை விளக்கிய விதம் அருமை. இளம் வயது கேரக்டர்களில் வரும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். முழுநீள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரை திரையில் விறுவிறுப்பாக கையாண்ட விதத்துக்காக, இயக்குனர் லோகேஷ் அஜில்ஸை பாராட்டலாம். மாறுபட்ட கதைக்களத்துக்கு ஏற்ப இமானின் பின்னணி இசை மிரட்டியுள்ளது. கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும் சீரியல் கில்லிங் இன்வெஸ்டிகேஷன் படத்தை தூணாக நின்று தாங்குகின்றன. லாஜிக் பார்க்கவில்லை என்றால், ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.