திருவனந்தபுரம்: ‘பீஸ்ட்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களிலும் தெலுங்கில் ‘தசரா’ படத்திலும் வில்லனாக நடித்தவர் ஷைன் டாம் சாக்கோ. ஷைன் டாம் சாக்கோவுக்கும், மாடல் அழகி தனுஜா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண அறிவிப்பை எதிர்பார்த்த நிலையில் அவர்கள் பிரிந்து திருமணம் நின்று போனது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஷைன் டாம் சாக்கோவை திருமணம் செய்வதாக இருந்த தனுஜா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி யாரையும் கண்மூடித்தனமாக நம்பவே கூடாது. அனைவரிடமும் இருந்து கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது. சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது.
நான் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னை எதுவுமே செய்ய விடுவது இல்லை. என் பிரச்சனையை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. நாம் சோகமாக இருக்கும்போது எல்லாத்தையும் ஷேர் செய்வோம். ஆனால் பிரேக்கப்பிற்கு பிறகு நம் பெயரை கெடுக்கும் நோக்கத்தில் அதை எல்லாம் வெளியே சொல்வார்கள். யாராக இருந்தாலும் நம்பவே கூடாது. நம்முடன் இருக்கும்போது சத்தியம் செய்வார்கள். ஆனால் அது எதையும் நம்பக் கூடாது. எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் நம்பாதீர்கள் என்றே சொல்கிறேன். எனது குடும்பத்தாரின் புகைப்படத்தை அவர் (ஷைன் டாம் சாக்கோ) உடைத்தார். மனதளவில் காயம் தந்தார். இவ்வாறு தனுஜா கூறியுள்ளார்.