சென்னை: ‘ராயன்’ படத்தை பார்த்துவிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு டிவிட்டரில் பாராட்டியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ராயன்’. தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 50வது படமான இதை அவரே எழுதி, இயக்கியுள்ளார். சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். துஷாரா விஜயன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ், சந்தீப் கிஷன், சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 26ம் தேதி திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
அனைத்து தரப்பினரையும் இப்படம் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது டிவிட்டரில், ‘ராயன் படத்தை பார்த்தேன். நடிப்பும் சரி, இயக்கமும் சரி, தனுஷ் சிறப்பாக செய்திருக்கிறார். மிகச்சிறந்த நடிப்பை பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் பிற நட்சத்திரங்களும் வெளிக்காட்டியுள்ளனர். மின்சாரம் போல் பாயும் இசையை மெஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்திருக்கிறார். இது கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார். இந்த டிவிட் சினிமா வட்டாரத்தில் வைரலாகியுள்ளது.