சென்னை: வடலூர் ஜே.சுதா ராஜலட்சுமி தயாரிப்பில் ஜனா ஜாய் மூவீஸ் மற்றும் குழுவின் சார்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்யமாலா’. ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்தி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளார். எண்பதுகளில் நடக்கும் விதமாக தெருக்கூத்து கலையை மையப்படுத்தி அதன் ஊடாக ஒரு அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் நடித்து பிரபலமான ஆர்யமாலா-காத்தவராயன் என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.கார்த்தி கூறும்போது, ‘இதில் கூத்துக்கலைஞனாக நடித்துள்ளேன். அதே தோற்றத்தில் பல ஊர்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்ய இருக்கிறேன்’ என்றார். நாயகி மனிஷா ஜித், கம்பீரம் படத்தில் சரத்குமார் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இந்தப்படத்தில் ‘அத்திப்பூவப்போல’ என்கிற பாடலை பாடியுள்ளார். இந்தப்படத்தில்தான் அவர் கடைசியாக பாடினார். வரும் 18ம் தேதி படம் ரிலீஸாகிறது.