மும்பை: பாலிவுட் நடிகை ரிச்சா சதாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய விருதாக கருதப்படும் ‘செவாலியர் டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ்’ என்ற விருதை (கலைத்துறையில் சிறந்த பங்களிப்பு) பாலிவுட் நடிகை ரிச்சா சதா பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரான்ஸ் அரசின் விருதை பெறுவதை நினைத்து பெருமை அடைகிறேன். அந்த விருதை பெறுவது எனது அதிர்ஷ்டமாகவும் உணர்கிறேன். இவ்வளவு பெரிய கவுரவம் கிடைக்கும் என்று என்னால் நம்பமுடியவில்லை.
இந்தியா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும், மாற்றத்தை ஏற்படுத்தும் நாடுகளாக உள்ளன. இரு நாடுகளும் மனிதர்களின் நிலை மற்றும் அனுபவத்தைப் பற்றிய அழகான கதைகளை திரைப்படங்களின் மூலம் எடுத்து சொல்லும் என்று நம்புகிறேன்’ என்றார். இதுகுறித்து ரிச்சா சதாவின் கணவரும், நடிகருமான அலி ஃபசல் கூறுகையில், ‘ரிச்சாவுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த கவுரவமாக பார்க்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அந்த விருதுக்கு அவர் தகுதியானவர்’ என்றார்.