சென்னை: ரோமியோ பிக்சர்ஸ், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. நடிகர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கிறார். விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். வருகின்ற ஜூலை 11ம் ேததி திரைக்கு வருகிறது. படம் குறித்து விஷ்ணு விஷால் கூறுகையில், ‘எனது பெரியப்பாவின் மகனான ருத்ரா, என் சொந்த தம்பி இல்லை. அப்பா, பெரியப்பா இருவரும் தீவிர சினிமா ரசிகர்கள். படத்துக்கு ஒரு டிக்கெட் வாங்கி, முதல் பாதியை ஒருவரும், இரண்டாம் பாதியை ஒருவரும் பார்த்துவிட்டு, படம் முடிந்ததும் மாறி, மாறி கதை சொல்லிக்கொள்வார்கள். ருத்ராவை அறிமுகம் செய்வது, நான் செய்ய வேண்டிய முக்கியமான கடமை.
அதை இப்போது நிறைவேற்றி விட்டேன்’ என்று நெகிழ்ந்தார். ருத்ரா கூறும்போது, ‘எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது. என் அண்ணன் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்ய நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். சினிமா மட்டுமே என் முதல் நண்பன். உதவி இயக்குனராக பணிபுரிந்து, பிறகு நடிகராகலாம் என்ற எண்ணம் கார்த்தி சாரை பார்த்து ஏற்பட்டது. நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார். ஜென் மார்ட்டின் இசை மிகச்சிறப்பாக இருக்கும்’ என்றார்.