2050ல் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளும் மக்களைக் கண்காணிக்க, ஒவ்வொரு வீட்டிலும் அரசாங்க கருவி பொருத்தப்படுகிறது. அதை தனியார் போலீஸ் கண்காணிக்கிறது. அப்போது ஏலியனை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார், ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பாக இருக்கிறார். அவரது உதவியாளர்கள் கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ். இந்நிலையில், கணேஷ் குமாரைப் பற்றிய ஆவணப்படத்தை சேனல் உருவாக்குகிறது. அப்போது 250 வயது ஏலியனை 25 வயது கோகுல் சுரேஷ் காதலிக்கிறார். இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் நாட்டில் ஏற்படும் பல மாற்றங்களைச் சொல்லி, ஏலியன் பெண்ணுடனான கோகுல் சுரேஷின் காதல் வென்றதா? பூமியில் நடக்கும் ஏலியன் தாக்குதலுக்கான ரகசியம் என்ன என்பது குறித்து மீதி கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆவணப்படம் போல் தொடங்கி, இறுதியில் திரைப்படமாக முடிவது புதுமை.
ஏலியனாக அனார்கலி மரைக்கார், கோகுல் சுரேஷ் (சுரேஷ் கோபியின் மகன்), அஜு வர்கீஸ், கணேஷ் குமார் ஆகியோர் படம் முழுக்க வருகின்றனர். வசனம் பேசாமல் பார்வையிலேயே வசீகரிக்கும் அனார்கலி மரைக்கார், கோகுல் சுரேஷுக்கு லிப்லாக் மூலம் ‘கிக்’ ஏற்றுவது கிளுகிளுப்பு. நடிப்பை விட பேச்சுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால், எதிர்கால ஏஐ விஷயங்களும் சீரியசாக இல்லாமல் காமெடியாக கடந்து செல்கின்றன. விஞ்ஞான யுகத்தை திரையில் பார்த்து முடிப்பதற்குள், மலையாள வசனங்களை ஆங்கிலத்தில் சப்-டைட்டிலாகப் படிப்பதற்குள் அடுத்தடுத்த வசனம் வந்து, முந்தைய வசனத்தைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருக்கிறது.
ஆடியன்சை 2050க்கே அழைத்துச் சென்றுவிடுகிறது, ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ் பய் கேமரா. சங்கர் சர்மாவின் பின்னணி இசை ஈர்க்கிறது. எடிட்டர் சீஜே அச்சு, ஆர்ட் டைரக்டர் எம்.பாவா ஆகியோரின் பணியும், விஎஃப்எக்ஸ் காட்சிகளின் உருவாக்கமும் படத்தை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கமே பெரிதாக இருப்பதால், டெக்னிக்கலாக அருண் சந்து, சிவ சாய் ஆகியோரின் எழுத்துகள் சிந்திக்கவில்லை. இயக்குனர் அருண் சந்து வித்தியாசமான படத்தைக் கொடுக்க முயன்று, பாதி வெற்றிபெற்றுள்ளார். எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கையும், உலகமும் எப்படி இருக்கும் என்ற அதீத கற்பனையை திரையில் ஓடவிட்டு, ‘ககனாச்சாரி’ குழுவினர் கலகலக்க வைத்துள்ளனர்.