சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது கணவர் ஹரி கிருஷ்ணனுடன் குடியேறும் லிஜோமோல் ஜோஸ், கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை செல்போன் மூலம் அறிந்து அதிர்கிறார். பிறகு ஒரு வேகத்தில் கணவரைக் கொன்று, அவரது உடலை பிரிட்ஜில் அடைத்து வைக்கிறார். ஆனால், வழக்கம்போல் தனது பணிகளில் ஈடுபடுகிறார். அப்போது ஹரி கிருஷ்ணன் காணவில்லை என்று அவரது காதலி லாஸ்லியா மரியநேசன் போலீசில் புகார் கொடுக்கிறார். அதுபற்றி விசாரிக்கும் போலீசாருக்கு தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கிறது. பிறகு நடப்பது மீதி கதை.
பூ ஒன்று புயலான மாதிரி, கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டவுடனே அவரைக் கொல்லும் லிஜோமோல் ஜோஸ், படம் முழுக்க அமைதியான நடிப்பில் ருத்ர தாண்டவமாடி இருக்கிறார். அவரது கணவராக வரும் ஹரி கிருஷ்ணன், முதலில் அப்பாவியாக இருந்து, பிறகு ‘அட… பாவி’ என்று சொல்ல வைத்துள்ளார். சுயபாதுகாப்புக்காக மட்டுமே ஆண்களைச் சார்ந்திருக்கும் லாஸ்லியா மரியநேசன் இயல்பாக நடித்துள்ளார். கதையின் திருப்புமுனைக்கு உதவும் தாரணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி, இணை ஆணையர் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், கான்ஸ்டபிள் வைரபாலன் உள்பட அனைவரும் நேர்த்தியாக நடித்துள்ளனர்.
ஒரே அறையில் பெரும்பாலான காட்சிகள் நடந்தாலும், அதை ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன் தெளிவாகப் படமாக்கியுள்ளார். கதைக்கேற்ற பாடல்களையும், பின்னணி இசையையும் கோவிந்த் வசந்தா சிறப்பாக வழங்கி இருக்கிறார். எடிட்டர் இளையராஜா சேகர் பணி கச்சிதம். இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன், பெண்ணியத்தை உயர்த்தியுள்ளார். என்னதான் மனம் கல்லாக இருந்தாலும், கணவனைக் கொன்ற பின்பு சிறிய சலனத்தைக் கூட லிஜோமோல் ஜோஸின் முகத்தில் காண முடியாதது நம்பும்படி இல்லை.