மலையாள டி.வியில் ‘கூடெவிடே’ என்ற சீரியல் மூலம் பிரபலமானவர், பிரார்த்தனா. அவரது தோழி, பிரபல மாடல் ஆன்ஸி. சில நாட்களுக்கு முன்பு பிரார்த்தனாவும், ஆன்ஸியும் ஒரு கோயிலில் திருமணம் செய்துகொள்ளும் வீடியோ வெளியானது. ‘எனது தோழியும், மாடலுமான ஆன்ஸியை திருமணம் செய்துகொண்டேன்’ என்ற தகவலை அந்த வீடியோவுடன் பகிர்ந்திருந்தார், பிரார்த்தனா. மேலும், ‘தங்கள் மனதில் விஷம் நிறைந்தவர்கள், மனிதர்கள் முன்னிலையில் நடிப்பவர்கள், குறுகிய மனம் படைத்தவர்கள் விலகியிருங்கள்’ என்றும் அவர் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் இருவரும் பூமாலை மாற்றி, தாலி கட்டிக்கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது. இருவரும் நெற்றி வகிட்டில் திலகமிட்டு, கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அது உண்மையான திருமணம் என்று நினைத்து ரசிகர்கள் வாழ்த்தினர்.
ஒரே பாலின திருமணத்தை ஆதரித்து சமூக செயற்பாட்டாளர்கள் சிலரும் வரவேற்றிருந்தனர். இந்நிலையில், அந்த திருமணம் ரீல்ஸ்சுக்காக படமாக்கப்பட்டதாக பிரார்த்தனாவும், ஆன்ஸியும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரார்த்தனா கூறுகையில், ‘எனது தோழியை திருமணம் செய்வது போன்ற ரீல்ஸை வெளியிட்டு, கேரள ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள முயற்சித்தேன். ஏற்கனவே தெலுங்கு நடிகைகள் இதுபோன்ற ரீல்ஸை வெளியிட்டிருந்தனர். அதை ரீ-கிரியேட் செய்து நாங்கள் ஒரு வீடியோ வெளியிட்டோம். வைரலாவதற்காகவே வீடியோ வெளியிட்டேன். எனது தோழி ஆன்ஸிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான்’ என்றார். உண்மை தெரிந்த பிறகு ரசிகர்கள், அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘ஒரே பாலினத்தை சேர்ந்தவரை திருமணம் செய்வது போல், கேலியாக வீடியோ எடுத்து பரப்பியது, உண்மையாக நடக்கும் ஒரே பாலின திருமணத்தை அவமதிக்கும் செயல்’ என்று, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.