மும்பை: ஏ.பி.அர்ஜூன் இயக்கத்தில் துருவா சர்ஜா ஹீரோவாக நடித்துள்ள பான் இந்தியா படம், ‘மார்டின்’. ஹீரோயின்களாக வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசை அமைக்க, உதய் மேத்தா மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். நடிகர் அர்ஜூன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இவரது அக்காவின் மகன்தான் துருவா சர்ஜா. தவிர, மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும் கூட. வரும் அக்டோபர் 11ம் தேதி 13 மொழிகளில் உலகம் முழுக்க திரைக்கு வரும் ‘மார்டின்’ படம், முழுநீள ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் இண்டர்நேஷனல் பிரஸ்மீட் மும்பையில் நடந்தது. அப்போது டிரைலர் வெளியிடப்பட்டது. பிறகு பேசிய துருவா சர்ஜா, ‘ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இந்திய தேசப்பற்றை மையமாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. எனது அங்கிள் அர்ஜூன்தான் எனக்கு காட்பாதர். விரைவில் அவர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். எனக்கு திரையுலகிலும், சொந்த வாழ்க்கையிலும் அவர்தான் வழிகாட்டி. சிறுவயதில் இருந்தே அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
அவரிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டுள்ளேன்’ என்றார். அடுத்து பேசிய அர்ஜுன், ‘இப்படம் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும். முதல் பாகத்துக்கான கதை, திரைக்கதையை எழுதியிருக்கும் நான், இதில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. துருவா சர்ஜா மிகவும் திறமையான நடிகர். அவரது நடிப்பு மற்றும் உடற்பயிற்சிகளைப் பார்த்து நான் மிரண்டுவிட்டேன். அவரிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்பதுதான் உண்மை. ‘மார்டின்’ படம் ஒட்டுமொத்த திரையுலகினரையும் வியக்க வைக்கும்’ என்றார்.