ஐதராபாத்: பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள ஜான்வி கபூர், தென்னிந்திய மொழியில் அறிமுகமாகும் படம், ‘தேவரா’. இது 2 பாகங்களாக உருவாகிறது. முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர், இப்படத்தை தொடர்ந்து ராம் சரண் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், ‘தேவரா’ படத்தின் ஷூட்டிங் இடைவிடாமல் நடந்து வருகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ஜான்வி கபூர் பாடும் டூயட் பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ளது படக்குழு.
இதற்கு முன்பு கோவாவில் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப் அலிகானுக்கு இடையிலானஆக்ஷன் காட்சிகள் படமானது. இந்நிலையில், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக ஜான்வி கபூர் தெலுங்கு பேச கற்றுக்கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் அம்மா ஸ்ரீதேவிக்கு பல மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். தற்போது என்னால் தெலுங்கை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பேச முடியவில்லை என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
எனினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ‘தேவரா’ படக்குழுவினர் எனக்கு அதிக பொறுமையுடன் அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து வருகின்றனர்’ என்றார். கொராட்டலா சிவா இயக்கும் இப்படம், வரும் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. சினிமாவில் நிலவும் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி ஜான்வி கூறும்போது, ‘அது மற்ற துறைகளைவிட சினிமாவில் அதிகம் என்கிறார்கள். அது உண்மைதான். நிறைய நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி என்னிடம் சொல்லி வருந்தியிருக்கிறார்கள். எனக்கு அந்த அனுபவம் கிடையாது’ என்றார்.
