சமீபத்தில் வெளியான ‘பேரன்பும் பெருங்கோபமும்’, ‘படை தலைவன்’ ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் லோகு. அவரது இயல்பான தோற்றமும், நடிப்பும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில், அதாவது, முதல் காட்சியில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து திரையுலகில் அறிமுகமான லோகு, பிறகு ‘சுழல்’ என்ற வெப்தொடரில் நடித்தார்.
தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீயவர் குலை நடுங்க’, விஷ்ணு விஷால் நடிக்கும் ‘ஆர்யன்’ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள லோகு, நடிகர் கதிரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர்களில் பல ‘கதிர்’கள் இருப்பதால், இவரை ‘பரியேறும் பெருமாள்’ கதிர் என்று சொன்னால் அடையாளம் தெரியும். நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் லோகு, குணச்சித்திரம் மற்றும் இயல்புத்தன்மை மீறாத வில்லன் கேரக்டரில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.