தீயத்தூர் கிராமத்தில் மழையை நம்பி விவசாயம் செய்யும் எளிய குடும்பத்தின் தலைவி பாண்டியக்காவுக்கு மகன்கள் வேல.ராமமூர்த்தி, மாரிமுத்து, ஜெரால்ட் மில்டன், மகள் தீபா சங்கர் இருக்கின்றனர். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த அவர்களின் தேன்கூட்டை மாரிமுத்துவின் மனைவி செந்தில்குமாரியின் வெடுக்குத்தனமான பேச்சும், அலட்சியமான நடத்தையும் சிதற வைக்கிறது. இப்படி சிதைந்து கிடக்கும் உறவுகளைச் சரிப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடும் வேல.ராமமூர்த்தியின் மகன் சுரேஷ் நந்தாவுக்கு வெற்றி கிடைத்ததா என்பது மீதி கதை.
‘கிழக்குச் சீமையிலே…’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ வரிசையில் இப்படத்தையும் சொல்லலாம். கூட்டுக்குடும்பத்தின் மேன்மையையும் மற்றும் சகோதரர்களின் பாசத்தையும் இதயம் கனக்க, கண்கள் பனிக்கச் சொல்லியிருக்கின்றனர். வேல.ராமமூர்த்தியும், தீபா சங்கரும் உணர்வுப்பூர்வமாக போட்டி போட்டு நடித்துள்ளனர். கிராமத்து இளைஞனாக சுரேஷ் நந்தா இயல்பாக நடித்துள்ளார். நந்தனாவும் அற்புதமாக நடித்துள்ளார். அடக்கமான மூத்த மருமகளாக ரமா, அடங்காப்பிடாரி இளைய மருமகளாக செந்தில்குமாரி ஆகியோர், அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர். பாண்டியக்காவும் பாசத்தைப் பொழிந்துள்ளார்.
மாரிமுத்து, ஜெரால்ட் மில்டன் மற்றும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் யதார்த்தமாக நடித்துள்ளனர். எம்.சீனிவாசனின் ஒளிப்பதிவு, தீயத்தூர் கிராமத்தை அங்கிருந்தே பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் கிராமிய மணத்துடன் இருக்கின்றன. பின்னணி இசை கதைக்கு கூடுதல் சக்தி அளித்துள்ளது. கூட்டுக்குடும்பத்தின் முரண்பாடுகளைக் களைந்து, ஒருவரை ஒருவர் அரவணைத்து வாழ்வதே சிறந்தது என்று சொன்ன இயக்குனர் நாகராஜ் கருப்பையா கவனத்தை ஈர்க்கிறார். முடிவு இப்படித்தான் இருக்கும் என்று கணிக்க முடிவதும், இளைய மருமகள் திடீரென்று திருந்துவதும் சுவாரஸ்யத்தைக் குறைக்கின்றன.