லாஸ்ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டாம் குரூஸ். இவருக்கும் உலகமெங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் மிரள வைக்கும் ஸ்டண்ட் காட்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மிஷன் இம்பாசிபிள் தி பைனல் ரெக்கானிங்’ படத்தில் நடிகர் டாம் குரூஸ் எரியும் பாராசூட்டில் இருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தார். ஸ்டண்ட் கலைஞர்களின் உதவி இன்றி டாம் குரூஸே இந்த சாகச காட்சியில் நடித்திருந்தார். இதன்மூலம் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை குதித்த நபர் என்கிற கின்னஸ் சாதனையை டாம் குரூஸ் படைத்திருந்தார். இந்த சாதனைகளெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவருக்கு ஆஸ்கர் விருது மட்டும் கிடைக்காமலே இருந்தது.
இப்படி ஒரு திறமைமிக்க நடிகருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படாவிட்டால் அவ்விருதுக்கே பெருமையில்லை என்று ரசிகர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த ஆஸ்கர் விருது தற்போது டாம் குரூஸுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் திரைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்பு அறிவித்து உள்ளது. டாம் குரூஸ் இதுவரை நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.