சென்னை: சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரித்துள்ள படம், ‘3 BHK’. சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா, சதீஷ், சரஸ் மேனன், விவேக் பிரசன்னா, தலைவாசல் விஜய், ஆவுடையப்பன் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் எழுதி இயக்கியுள்ளார். பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரித் ராம்நாத் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார்.
வரும் ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சித்தார்த் கூறுகையில், ‘இது எனக்கு 40வது படம். சிறுவயதில் இருந்தே சொந்த வீட்டில்தான் வசித்து வந்தேன். எனது காதல் மனைவி அதிதி ராவ் ஹைதரிக் காக சமீபத்தில் ஒரு வீட்டை வாங்கினேன். இந்த படத்தில் நடித்தபோதே நான் ஒரு வீடு வாங்கியதை நல்ல சகுனமாக நினைத்து மகிழ்ந்துள்ளேன்’ என்றார். சரத்குமார் கூறும்போது, ‘சொந்த வீடு என்பது அனைவருக்குமான ஒரு பெருங்கனவு.
சென்னையில் மட்டும் 11 வீடுகளுக்கு மேல் மாறியிருப்பேன். பிறகுதான் சொந்த வீடு வாங்கினேன்’ என்றார். தேவயானி கூறுகையில், ‘ஃபீல்குட் மற்றும் பாசிட்டிவ்வான படம் இது. பல வருடங்கள் கழித்து மீண்டும் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளேன். இசை அமைப்பாளர் அம்ரித் ராம்நாத்துக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது’ என்றார்.
ஸ்ரீகணேஷ் கூறும்போது, ‘சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு, இதில் சித்தார்த் தங்கையாக நடித்துள்ள மீதா ரகுநாத்தின் துணிச்சலுக்கு நன்றி. எழுத்தாளர் அரவிந்த் சச்சிதானந்தத்தின் ‘3BHK வீடு’ கதை எமோஷனலாகவே இருக்கும். அதிலிருந்து இந்த படத்துக்கான உத்வேகம் கிடைத்தது’ என்றார்.