திண்டுக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில், இரவு நேரத்தில் 6 நண்பர்கள் இணைந்து உற்சாகமாக மது அருந்துகின்றனர். திடீரென்று அவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. அதில் ஒருவர் மது பாட்டிலால் குத்தப்பட்டு இறந்துவிடுகிறார். ஐவரில் அவரை குத்தியது யார் என்று ஆளாளுக்கு குற்றம் சாட்டுகின்றனர். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டு, இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க ஐவரும் முடிவு செய்கின்றனர். அவர்களின் விபரீத செயலால், தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்பது மீதி கதை.
முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜூன் தேவ், குணவந்தன் தனபால், சாம்பசிவம், பிரேம் ஆகியோர், சில நேரங்களில் கேரக்டருக்கு ஏற்பவும், சில நேரங்களில் சற்று மிகையாகவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சில மனிதர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை அழுத்தமாக சொன்னவிதத்தில், இயக்குனர் இராம் இந்திரா கவனத்தை ஈர்க்கிறார்.
பெண்களே இல்லாத படம் என்றாலும், இரவு நேரத்தில் மட்டுமே கதை நடப்பதால், ஆண்களின் முகங்களை பார்ப்பதில் சலிப்பு ஏற்படவில்லை. பரபரப்பான ரோடு, அடர்ந்த காடு, சுடுகாடு என்று இரவில் நடக்கும் கதைக்கு அஜய் ஆபிரகாம் ஜார்ஜின் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. கார் ஹெட்லைட்டில் படமாக்கப்பட்ட காட்சி கவனத்தை ஈர்க்கிறது. அனிலேஷ் எல்.மேத்யூவின் பின்னணி இசை, கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளது. சில நீளமான காட்சிகளும், ஐவரின் ஒரேமாதிரி நடிப்பும் சோர்வடைய வைக்கிறது. எடிட்டர் தின்சாவின் பணி பாராட்டுக்குரியது.