முன்னாள் உலக அழகியும், முன்னணி நடிகையுமான ஐஸ்வர்யா ராயை காதல் திருமணம் செய்துள்ள அபிஷேக் பச்சனுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதையொட்டி அபிஷேக் பச்சன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘சமூக வலைத்தளங்களில் வரும் தவறான தகவல்கள் என்னையும், குடும்பத்தினரையும் பெரிதும் பாதித்துள்ளது. முன்பு இதுபோன்ற செய்திகளை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தேன். இன்று குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முன்பு என்னைப் பற்றி வெளியான தகவல்கள் பாதிக்கவில்லை.
இன்று எனக்கென்று குடும்பம் இருப்பதால், இதுபோன்ற தவறான செய்திகள் அதிகமாக பாதிக்கிறது. எங்களைப் பற்றி தவறான தகவல்களை பரப்புபவர்கள் உண்மையை விரும்பாததால், எனது விளக்கம் அவர்களுக்கு உதவாது என்று நினைக்கிறேன். நான் எவ்வளவு தெளிவுபடுத்தினாலும், அதையும் அவர்கள் திசை திருப்பி விட்டுவிடுவார்கள். காரணம், எதிர்மறை செய்திகள் அதிகமாக விற்பனையாகின்றன. நீங்கள், நான் இல்லை. என் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது. நான் பதிலளிக்க வேண்டியவர்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியது இல்லை. பொய்யை மட்டுமே பரப்புபவர்கள், தங்கள் மனச்சாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும்.
கம்ப்யூட்டர் திரைக்கு பின்புறம், தன் பெயரை குறிப்பிடாமல் உட்கார்ந்தபடி மோசமான விஷயங்களை எழுதுவது சுலபம். நீங்கள் ஒருவரை காயப்படுத்துகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆன்லைனில் இதுபோன்ற செய்தியை பரப்புபவர்கள், துணிச்சல் இருந்தால் நேரில் வந்து, என் முகத்துக்கு நேராக சொல்லுங்கள். அவர்களை நான் மதிக்கிறேன்’ என்றார்.