ஐதராபாத்: தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘குபேரா’ என்ற பான் இந்தியா படம், வரும் 20ம் தேதி திரைக்கு வருகிறது. தேவி பிரசாத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது தனுஷ் பற்றிய வீடியோ ஒன்று ஒளிபரப்பானது. பிறகு தனுஷ் உருக்கமாக பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பேசியது வருமாறு:
இங்கு ஒளிபரப்பான வீடியோவை பார்க்கும் போது, என்னுடைய தந்தை கஸ்தூரிராஜாவை நினைத்து பார்க்கிறேன். அவர் எங்களுக்காக பட்ட கஷ்டங்கள், வாங்கியிருந்த கடன்கள், சிந்திய வியர்வை, ரத் தம் எல்லாமே நாங்கள் பெரிய சாதனைகளை படைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. திரையுலகில் நான் சாதித்ததாக சொல்லப்பட்ட இந்த வீடியோவில், நீங்கள் பார்த்த அனைத்து விஷயங்களுக்கும் காரணம் என் தந்தைமட்டுமே. அவர் சாதித்த விஷயங்களுக்கு முன்னால் எனது சாதனைகள் என்று எதுவும் இல்லை.
அவர் ஒரு விவசாயி, கிராமத்து மனிதர். இன்று நான் இங்கே நிற்பதற்கு அவர்தான் முக்கிய காரணம். என் பேச்சை தொடங்குவதற்கு முன்பு சேகர் கம்முலாவுக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். ஆனால், தந்தைக்கு முதலில் நன்றி சொல்கிறேன். ’குபேரா’ எனக்கு நடிப்பில் 51வது படம். தெலுங்கில் 2வது படம். ‘சார்’ படத்துக்கு முன்பே சேகர் கம்முலா இந்த கதையை என்னிடம் சொன்னார். ஆனால், அதை எழுதி முடிப்பதற்கு அதிக நாட்களானது. அவர் மிகவும் பிடிவாதக்காரர். மிகச்சரியான காரணங்களுக்காக பிடிவாதக்காரராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். என் வாழ்நாளில் மறக்கவே முடியாத இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய சேகர் கம்முலாவுக்கு கோடானு கோடி நன்றிகள்.