நடிகர் சித்தார்த்தின் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தியது குறித்து ஒரு கன்னடராக நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அம்மாநில விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாண்டியாவிலும் பெங்களூரிலும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த முழு அடைப்புக்கு கர்நாடகம் முழுதும் ஆயிரத்து 900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு பெங்களூரில் நடந்தது. அப்போது காவிரி பிரச்சனையை காரணம் காட்டி அந்நிகழ்ச்சியை கன்னட அமைப்பினர் தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரம் சர்சையை கிளப்பிய நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; “ நீண்ட நாட்களாக காவிரி பிரச்சனையை தீர்க்க தவறிய அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் கேள்வி கேட்பதற்கு பதிலாக , மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி கேட்பதற்கு பதிலாக, பொது மக்களையும், திரை கலைஞர்களையும் தொந்தரவு செய்வது ஏற்க முடியாது; ஒரு கன்னடராக, கன்னடர்கள் சார்பாக மன்னிக்கவும்” என கூறியுள்ளார்.