சென்னை: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ஆகியோர் நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம், ‘அன்னபூரணி’. பின்னர் டிசம்பர் மாதம் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அன்னபூரணி படத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக நடித்த நயன்தாரா அசைவ உணவுகள் சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
இதனையடுத்து பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாகக் கூறி மும்பை, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அன்னபூரணி படக்குழுவினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து ‘அன்னபூரணி’ படம் நீக்கப்பட்டது.
மேலும் எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் ‘அன்னபூரணி’ திரைப்படம் எடுக்கவில்லை என மன்னிப்பு கோரி நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது ‘அன்னபூரணி’ படம் சிம்பிளி சவுத் என்ற ஓடிடி தளத்தில் இன்று முதல் வெளியாகிறது. ஆனால் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் ஓடிடியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.