மும்பை: கடந்த 17 ஆண்டுகளாக ஐசிசி டி20 உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 29ம் தேதி நடந்த இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ஐசிசி டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அதைப் பார்த்த கிரிக்கெட் ரசிகர்களும், ஆர்வலர்களும் ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். உலக கோப்பை வென்றவுடன் விராத் கோஹ்லி அழுத காட்சி பதிவான ஒரு வீடியோ வைரலானது.
இந்த உலகமே பார்த்து கொண்டாடிய கிரிக்கெட் போட்டியை, அமிதாப் பச்சன் மட்டும் பார்க்கவே இல்லை. காரணம், இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டியை டி.வியில் அவர் பார்த்தால், அது படுதோல்வி அடைந்துவிடும் என்று நம்பப்படுகிறது. எனவேதான் போட்டியைப் பார்க்க வேண்டாம் என்று, அமிதாப் பச்சனிடம் கிரிக்கெட் ரசிகர்கள் அன்புடன் கோரிக்கை விடுத்தனர்.
அவரும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று இறுதிப்போட்டியை மட்டும் பார்க்கவில்லை. இதுகுறித்து தனது பிளாக்கில் அமிதாப் பச்சன், ‘டி.வியில் ஒளிபரப்பான கிரிக்கெட் போட்டியை நான் பார்க்கவே இல்லை. நான் பார்த்தால், நாம் தோல்வி அடைகிறோம். இந்திய அணியைப் போன்றே எனது கண்களிலும் கண்ணீர்’ என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும், இந்திய அணி வென்றதை அறிந்து கண்ணீர் வருவதாக, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.